கணவரின் உயிருக்காக சிறுநீரகங்களை பரிமாறிக்கொண்ட பெண்கள்

.
மும்பையில் கணவர்களை காப்பாற்ற இரு பெண்கள் தங்களது சிறுநீரகங்களை பரிமாறிக் கொண்டனர். மும்பையை சேர்ந்தவர் ஹரீஷ் பண்டாரி ( 43) என்பவருக்கு கடந்த 2010ம் ஆண்டு சிறுநீரகம் பழுதடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டு மரண வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். நீண்ட நாள் உயிர்வாழ சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தால் தான் ஒரே வழி என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


பொருத்தமான சிறுநீரகம் தானமாக கிடைக்காத நிலையில் கணவரின் உயிரை காப்பாற்ற தனது சிறுநீரகத்தை வழங்க முன் வந்தார் அவரது மனைவி ராக்கி. மருத்துவர்கள் ராக்கிக்கு பரிசோதனை மேற்கொண்டனர். கிட்னி பொருந்தியது, ஆனால் ரத்தப்பிரிவு இருவருக்கும் வெவ்வேறாக இருந்ததால் பொருத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். ஹரீஸ் பண்டாரிக்கு ‘பி நெகட்டிவ்’. அவரது மனைவி ராக்கிக்கு ‘ஏ பாசிட்டிவ்’. இதனால் கணவரை காப்பாற்ற முடியாமல் ராக்கி தவித்தார்.


 இதே ரத்த பிரிவு கொண்ட யாராவது சிறுநீரகம் தானம் செய்தால் பிரச்சினை இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் பரோபாவை சேர்ந்த ஷா என்பவர் சிறுநீரகம் பாதிப்படைந்து மாற்று சிறுநீரகத்தை தேடி கொண்டிருப்பது பற்றி மும்பை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்திருந்தார். ஷாவின் மனைவி தீபிகாவுக்கு ரத்தப்பிரிவு ‘பி நெகடிவ்’ அவரது கணவருக்கு ‘ஏ பாசிடிவ்’. இதனால் அவரும் கணவரை காப்பாற்ற முடியாமல் போராடி கொண்டிருந்தார். தீபிகாவின் சிறுநீரகம் ராக்கியின் கணவருக்கும், ராக்கியின் சிறுநீரகம் தீபிகாவின் கணவருக்கும் ஒத்து போனது.

 இதை அறிந்ததும் இரண்டு பெண்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கள் கணவர்களின் உயிரை காப்பாற்ற சிறு நீரகங்கள் பரிமாறி கொள்ள இரண்டு பெண்களும் முழு மனதுடன் சம்மதித்தனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள், சட்ட பிரச்சினைகள் தடபுடலாக நடந்தன. எல்லாம் சரியானதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராக்கியின் சிறுநீரகம் தீபிகாவின் கணவருக்கும், தீபிகாவின் சிறுநீரகம் ராக்கியின் கணவருக்கும் பொருத்தப்பட்டது. தற்போது, இரு தம்பதிகளும் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

Popular Posts