நீதிபதிக்கு முன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட குற்றவாளி

.
தெலுங்கானாவில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதி தீர்ப்பை படிக்கும் பொழுது பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெடக் மாவட்டம் கோதாரம் கிராமத்தைச் சேர்ந்த முகமது யூசுப்பிற்கும் பிஸ்மில்லா கவுசிகா பேகத்திற்கும், திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், இவர்களுக்கு கடன் தொல்லையும் இருந்ததால், முகமது யூசுப் 2வது திருமணம் செய்யப் போவதாகவும் அதனால் வரதட்சணையாக வரும் பணத்தால் கடனை அடைக்கலாம் என்று மனைவியிடம் கூறியுள்ளார்.

இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறில், கடந்த 2011ம் ஆண்டு மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றபோது, மனைவியிடம் உன்னை தாய் வீட்டுக்கு கொண்டு விடப் போவதாக கூறியுள்ளார். இதனால் கணவருடன் சண்டை போட்ட மனைவியை ஆத்திரத்தில் அங்குள்ள ஆற்றில் தள்ளி கொன்றுள்ளார். இதையடுத்து, பிஸ்மில்லா தம்பி கொடுத்த புகாரின் பேரில் முகமது யூசுப் கைது செய்யப்பட்டு, கரீம்நகர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடந்துள்ளது.


இந்நிலையில், நேற்று நீதிபதி, யூசுப்பை பார்த்து, உன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உனது தண்டனைக்கான தீர்ப்பை படிக்க போகிறேன் என்று கூறி தீர்ப்பை படிக்க தொடங்கியுள்ளார். குற்றவாளி கூண்டில் நின்ற முகமது யூசுப், இதை கேட்டதும் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு, ரத்தம் பீறிட கீழே விழுந்துள்ளார். மேலும், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது கவலைக்கிடமான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular Posts